மைக்ரோவேவ் ரவா கேசரி (படங்களுடன்)

                     

பண்டிகை சமையங்கள்ல நிறைய இனிப்புகள் செய்து அசத்துவோம். ஆனா, காலையில இட்லி தோசையோட எத்தனையோ ஸ்வீட் பரிமாறினாலும், அது கேசரிக்கு ஈடாகாது.

அந்தக் கேசரியை, வேர்க்காம விறுவிறுக்காம, கைவலிக்கக் கிளறாம, அதுவும் கொலஸ்ட்ரால்  அதிகமாயிடுமேன்னு டயட் பயம் இல்லாம, மூணே ஸ்பூன் நெய்யில செய்து பரிமாறினா சந்தோஷம் இன்னும் ஜாஸ்தியாகுமா இல்லையா? இதோ, எளிதாக மைக்ரோவேவ் ரவா கேசரி...


தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்

சர்க்கரை - 1 1/4 கப்

ஏலக்காய் - 4

முந்திரிப்பருப்பு - 15

கேசரி கலர் - சிட்டிகையளவு

நெய் - 3 தேக்கரண்டி

தண்ணீர் - 2 1/2 கப்

செய்முறை

இந்தக் கேசரியில நான் திராட்சை சேர்க்கல. விருப்பமிருந்தா திராட்சை சேர்த்துக்கலாம்.

முந்திரிப்பருப்பை ஒடிச்சு வச்சுக்கோங்க.

கேசரி கலரைத் தண்ணீரில் கலந்து, கொதிக்கிறதுக்குச் சற்றுமுன்பாக இறக்கிவையுங்க.

ஏலக்காய் பொடிபண்ணி வச்சுக்கோங்க.

மைக்ரோவேவ் பாத்திரத்தில், ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு, ரவையையும், ஒடிச்சு வச்சிருக்கிற முந்திரியையும் போட்டு, ஒரு ஸ்பூனால நல்லாக் கலந்துவிடுங்க.மைக்ரோவேவ் ஹை ல, ரெண்டு நிமிஷம் வச்சு எடுங்க. திரும்ப வெளியில எடுத்துக் கொஞ்சம் கிளறி விட்டு மறுபடி ஒரு நிமிஷம் வச்சு எடுத்துக்கோங்க. முந்திரி வறுபட்டுப் பொன்னிறமா மாறியிருக்கணும். அதுதான் பதம்.


இப்ப வறுபட்ட ரவையில், கேசரி கலர் கலந்து சூடுபண்ணிவச்சிருக்கிற தண்ணீரை ஊற்றுங்க. கரண்டியால கட்டிகளில்லாம கலந்துவிடுங்க.


மறுபடியும் மைக்ரோ ஹை யில் 3 நிமிஷம். இப்போ, ரவை நன்றாக வெந்திருக்கும்.

வெந்த ரவை கலவையில், ஏலப்பொடியையும் சர்க்கரையையும் கொட்டி நன்றாகக் கிளறிவிடுங்க.


மறுபடியும் 2 நிமிஷம் மைக்ரோவேவில் வச்சு எடுத்து, ஒரு ஸ்பூன் நெய்யை மேலாக ஊற்றி, கேசரியை கரண்டியின் பின்பக்கத்தால் சமப்படுத்தி விட்டு, மறுபடியும் இரண்டு நிமிஷம் வச்சு எடுங்க. பத்தே நிமிஷத்தில், சிக்கனமான நெய்யில், சூப்பரான ரவா கேசரி தயார்.

அப்புறம் என்ன...இட்லி வடை, சட்னி சாம்பாரோட சாப்பிடவேண்டியதுதான்!
                                                 ********************

கருத்துகள்

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!