மாசி சம்பல் | மாசிக் கருவாடு பொரியல் | Masi Karuvadu Recipe in Tamil

மீன் உணவுப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த மாசி சம்பல் அல்லது மாசிக்கருவாடு பொரியல்.

மாசி மீன் அல்லது மாலத்தீவு மீனைப் பக்குவப்படுத்திப் பெறப்படும் மாசிக் கருவாட்டைக் கொண்டு தயாரிக்கப்படும் மாசி சம்பல் அல்லது மாசி பொரியல் செய்முறை. அட்டகாசமான இதன் சுவை அசைவப்பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.



தேவையான பொருட்கள் 

மாசித்தூள் - 3 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் வற்றல் - 4 அல்லது 5

பெரிய வெங்காயம் - 2 

தேங்காய் - 1 துண்டு

(அல்லது) தேங்காய்த் துருவல் 1 கப்

உப்பு - தேவையான அளவு 


தாளிக்க 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

உளுந்து - 1/2 டீஸ்பூன் 

கருவேப்பிலை - 1 இணுக்கு 

செய்முறை 

தேங்காய் மற்றும் வெங்காயத்தை நறுக்கிவைக்கவும்.

மாசித் தூளுடன், மிளகாய் வற்றல் மற்றும் தேவையான உப்புக் கலந்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடி செய்து கொள்ளவும். மாசிக் கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் சிறிதளவு உப்பு சேர்த்தால் போதும்.



அரைத்த பொடியுடன், தேங்காய் சேர்த்து சில வினாடிகள் அரைத்துவிட்டு, அத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொரகொரப்பாக அரைத்தால் போதும். 



சிறிதுகூடத் தண்ணீர் சேர்க்கக்கூடாது. வெங்காயம் சேர்த்து அரைத்தபின் துவையல் பதத்தில் இருக்கும்.

                   

வாணலியில் எண்ணெய் விட்டு,  அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். 

கடுகு வெடித்த பின், அதில் அரைத்து வைத்த மாசிக்கலவையைச் சேர்க்கவும்.


மிதமான தீயில் வைத்து, துவையல் பதத்தில் இருக்கும் மாசிக் கலவை உதிரியாக ஆகும் வரை பொரிக்கவும்.


மிகவும் சுவையான இந்த மாசி சம்பல், ரசம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

                                                ****************

கருத்துகள்