மட்டன் பிரியாணி | Mutton Biryani in Tamil



இது என்னோட சிநேகிதியின் பிரியாணி செய்முறை. மணமும் ருசியும் அமோகமா இருக்கும் இந்த பிரியாணியில்.

பொதுவாவே நாம் பிரியாணியில சேர்க்கிற அநேகப் பொருட்கள், மருத்துவ குணங்கள் உள்ளது. பிரியாணி பரிமாறினோம்னா, அதிலிருக்கிற கொத்துமல்லி, புதினா, பச்சைமிளகாய் தக்காளின்னு ஒண்ணொண்ணையா எடுத்து, ஓரத்தில் ஒதுக்குவாங்க சின்னக் குழந்தைகள். இந்த பிரியாணியில், அரைத்துச்சேர்ப்பதால் அப்படி ஒதுக்க முடியாது.

பிரியாணிக்குத் தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 3 கப்

மட்டன் (எலும்புள்ளது) - 3/4 கிலோ

வத்தல் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி

கரம் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி

சூரியகாந்தி எண்ணெய் - 50 மிலி

நெய் - 2 மேஜைக்கரண்டி

தயிர் - 1/2 கப்

முந்திரிப்பருப்பு - 15

எலுமிச்சம் பழம் - 1/2

பட்டை - 2 அங்குலம்

ஏலம் - 5

கிராம்பு - 6

பிரியாணி இலை - 3

உப்பு - தேவையான அளவு

அரைக்க

வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 3 (பெரியது)

பச்சைமிளகாய் - 10

இஞ்சி - 2 அங்குலம்

பூண்டு - 15 பல்

நறுக்கிய புதினா, கொத்துமல்லி - ஒவ்வொன்றும் 1/2 கப்



செய்முறை

அரிசியைக் கழுவி, அரைமணிநேரம் ஊறவச்சுக்கோங்க.

கறியைக் கழுவி, மஞ்சள் தூள், 1/4 கப் தயிருடன் பிரட்டி, 1/2 கப் தண்ணீர் & 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து, குக்கரில் 3 முதல் 5 விசில் வைத்து வேகவைத்து எடுத்துக்கோங்க.

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா கொத்துமல்லி எல்லாவற்றையும் மொத்தமாக, மிக்ஸியில் போட்டு அரைச்சு வச்சுக்கோங்க. ( இனி, ஓரத்தில் ஒதுக்கமுடியாதில்ல...)

குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், பிரியாணி இலை, முந்திரிப்பருப்பு போட்டுத் தாளிச்சுக்கோங்க.

அத்துடன், அரைத்த தக்காளி, வெங்காய மசாலா விழுதைச் சேர்த்து, கூடவே மசாலாப் பொடிகளையும், மீதமிருக்கும் 1/4 கப் தயிரையும் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கிக்கோங்க.

வதக்கியபின், வேகவைத்த மட்டனைச் சேர்த்து, அதிலிருக்கும் தண்ணீரையும் சேர்த்து மொத்தம் 4 1/2 கப் தண்ணீர் சேருங்க. தேவையான உப்பு சேர்த்து, 1/2 மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்க.

தண்ணீர் கொதிவரும் சமயத்தில், அரிசியைத் தண்ணீர் இன்றி வடிகட்டிச் சேருங்க. உப்பு சரிபாருங்க. மேலே ஒரு தேக்கரண்டி நெய்யும் கொஞ்சம் கொத்துமல்லி இலையும் சேர்த்துக்கோங்க.

குக்கரை மூடி, மிதமான தீயில் 5 நிமிடமும், மிகக்குறைவான தீயில் 8 முதல் 10 நிமிடங்களும் வைத்து இறக்குங்க. விசில் வரவேண்டியதில்லை. 15 நிமிடம் கழித்து, ஆவி அடங்கிய பின் திறந்து, அரிசி உடையாமல் மெதுவாகக் கிளறி விடுங்க.

மணமான, சுவையான மட்டன் பிரியாணி தயார்!

***

கருத்துகள்