கறிக்குழம்பு என்று எழுத ஆரம்பித்ததுமே நினைவுகள் முப்பது வருடங்கள் பின்னோக்கிப் பறக்க ஆரம்பித்துவிட்டன, அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமையென்றால் யாரிடமும் இன்றைக்கு என்ன சமையல் என்று கேட்கவேண்டியிருக்காது, அநேகமாக எல்லார் வீட்டிலும் கறிக்குழம்பாகத்தான் இருக்கும். அதன் துணை சமாச்சாரங்கள் வீட்டுக்கு வீடு வித்தியாசப்பட்டாலும், அசைவம் சாப்பிடுகிற வீடுகளில் ஆட்டுக்கறிதான் அடுப்புகளில் மணம்பரப்பிக்கொண்டிருக்கும்.
கறிக்குழம்பு எப்படி கட்டாயம் இருக்குமோ அதேபோல எங்கள் வீட்டில் அன்றைக்கு மாலையில் இஞ்சிச்சாறும் கட்டாயம் உண்டு. இஞ்சியும் பூண்டும் சேர்த்து இடித்தெடுத்து வென்னீரில் கொதிக்கவைத்து ஆளுக்கு அரை தம்ளர் தயாராக இருக்கும். அப்படி இப்படியென்று சிறிது நேரம் போக்குக்காட்டினாலும், இஞ்சிச்சாறு குடித்தால்தான் இரவுச் சாப்பாடு. ஆக, ஞாயிறு என்றாலே கறிக்குழம்பு வாசனையும் இஞ்சியின் காரமும் இன்றைக்கும் நினைவு வரத்தான் செய்கிறது.

தேவையான பொருட்கள்:
- ஆட்டுக்கறி - 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் அல்லது பல்லாரி வெங்காயம் - 200 கிராம்
- தக்காளி - 2
- தயிர் - 1/2 கப்
- இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
- பூண்டு - 8 பல்
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- வத்தல் பொடி - 1/1/2 தேக்கரண்டி
- மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
- பட்டை - 1 அங்குலத் துண்டு
- கிராம்பு - 4
- ஏலக்காய் - 3
- கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
அரைக்க:
- தேங்காய் (துருவியது) - 1/2 கப்
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- கசகசா = 1 தேக்கரண்டி அல்லது முந்திரி - 5 பருப்புகள்
கறியை நன்றாகக் கழுவிவைக்கவும்.
வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்
இஞ்சியையும் பூண்டையும் சேர்த்து அரைத்து வைக்கவும்,
தேங்காயை சீரகம் மற்றும் கசகசா அல்லது முந்திரியுடன் சேர்த்து நன்றாக அரைத்துவைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துப் பொரியவிடவும்., அதில் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் அதில் கழுவி வைத்த கறியையும் சேர்த்து வதக்கவும்.
இரண்டு மூன்று நிமிடங்களில் கறி சற்று நிறம் மாறிவரும். அப்போது தயிரைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிடவும். சில நிமிடங்கள் கழிந்ததும் மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து விடவும்.
குக்கரை மூடி, மூன்று விசில் வரும்வரை வேகவிடவும்.
ஆவி இறங்கியபின், குக்கரைத் திறந்து வெந்த கறியுடன் மசாலாப் பொடிகள், அரைத்த தேங்காய், தக்காளி, விருப்பப்பட்டால் ஒரு உருளைக் கிழங்கையும் சேர்த்து, தேவையான நீர் சேர்த்துக் கலந்துவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி மறுபடியும் குறைவான தீயில் வைத்து ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து இறக்கவும். சுவையான கறிக் குழம்பு தயார்.
இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்துக்கும் சேர்த்துச் சாப்பிட ஏற்ற குழம்பு.
Recipe in Engish
*******
கருத்துகள்
கருத்துரையிடுக
திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!