பச்சைப்பயறு அடை | பெசரட்டு செய்முறை

பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு என்று அழைக்கப்படும் இந்தப் பயறு ஆங்கிலத்தில் கிரீன் கிராம்( green gram) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே பயறு வகைகளில் புரோட்டீன் எனும் புரதச் சத்து மிக அதிகம். இந்தப் பச்சைப்பயறு, புரோட்டீன்கள், விட்டமின்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்தும் அதிகம் உடையது என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது என்றாலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. 




பச்சைப்பயறு அடைக்குத் தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு - 1கப்

புழுங்கல் அரிசி - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - 1 அங்குலத் துண்டு

பச்சை மிளகாய் - 2 அல்லது 3

கறிவேப்பிலை - 2 இணுக்கு

சீரகம் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

துருவிய தேங்காய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

பச்சைப்பயறையும் அரிசியையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறிய பயறு, அரிசிக்கலவையுடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவுடன் துருவிய தேங்காய் , நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வெங்காயத்தைச் சிறிது எண்ணெயில் வதக்கியும் சேர்க்கலாம்.

தேவையான உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்துக்குக் கலந்துகொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை விட்டு நன்றாகப் பரப்பிவிடவும். 

அடையைச் சுற்றிலும் அடையின் மேலும் பரவலாக நல்லெண்ணெய் விட்டுத் திருப்பி, மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான பச்சைப்பயறு அடை தயார். இதனை, காரச் சட்னி அல்லது தூளாக்கிய வெல்லத்துடன் சாப்பிடலாம்.

                                                           *****


கருத்துகள்