கடலைப் பருப்புப் பாயசம் | பாயசம் செய்முறை



தமிழர் சமையலில் பருப்பு வகைகள் மற்றும் பயறு வகைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. குழம்பாகவும் கூட்டாகவும், பலவிதப் பலகாரங்களாகவும் அவை அன்றாட சமையலில் பங்கெடுத்துக்கொள்கின்றன. இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் கடலைப்பருப்புப் பாயசம், தமிழகத்தில் மட்டுமன்றி, கேரளத்திலும் மிகப் பிரபலமான ஒன்று.





இதற்குத் தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - 1/2 கப்

ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1 கப்

நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய் - 3

முந்திரி - 15

திராட்சை - 15

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

கடலைப்பருப்பை குக்கரில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஜவ்வரிசியையும் தண்ணீரில் 1/2 தேக்கரண்டி நெய் விட்டு வேகவைத்துக்கொள்ளவும்.

ஒரு கப் தேங்காய்ப்பால் தயாரித்துத் தயாராக வைக்கவும்.

சிறிதளவு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.

வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

ஏலக்காயைப் பொடிசெய்துவைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் வேகவைத்த கடலைப்பருப்பு, ஜவ்வரிசி இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

அத்துடன், வெல்லக்கரைசல் சேர்த்துச் சூடேற்றவும்.

கலவை நன்கு கொதித்தபின், அதனுடன் தேங்காய்ப்பாலைக் கலந்துவிடவும். தூளாக்கிய ஏலக்காயையும் சேர்க்கவும்.

வாணலியில் நெய்விட்டு, முந்திரி திராட்சை மற்றும் தேங்காய்த் துண்டுகளை வறுக்கவும்.

பாயசம் தேங்காய்ப்பால் சேர்த்தபின் அதிகம் கொதிக்கவிடாமல், முந்திரி, திராட்சை மற்றும் தேங்காயைத் தூவி இறக்கவும்.

வறுத்த தேங்காய்த் துண்டுகள் இந்தப் பாயசத்துக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கும்.

சுவையான கடலைப்பருப்புப் பாயசம் தயார்.

***

கருத்துகள்