பூசணிக்காய் அடை & பூண்டு வெங்காயச் சட்னி


பூசணிக்காய் அடை & பூண்டு வெங்காயச் சட்னி 

அநேகமாய்ப் பார்த்தால், அதிகமான சத்துள்ள, ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்கள்தான் மிகவும் விலை மலிவாகவும் கிடைக்கின்றன. குறிப்பாகச் சொல்வதென்றால், கீரை வகைகள், பூசணிக்காய், பீட்ரூட் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  அவற்றுள் இந்தப் பூசணிக்காய் மிகவும் சுவையானதும் உடலுக்கு நன்மையளிப்பதும் கூட.

பூசணிக்காய் மற்றும் ஆரஞ்சு நிறமுள்ள காய்கறிகள் பழங்களில், பீட்டா கரோட்டின் என்னும் ஆன்டிஆக்சிடெண்ட் என்னும் நோய் எதிர்க்கும் சத்து அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகைய சத்துப்பொருள் நம் உடலில் சேரும்போது விட்டமின் ஏ ஆக மாறி நன்மையளிக்கிறது. பூசணிக்காயிலும் அந்த ஆன்டிஆக்சிடெண்ட் அதிகம் காணப்படுவதால், நாம் பூசணிக்காயை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.




பூசணிக்காய் அடை செய்யத் தேவையான பொருட்கள்

பூசணிக்காய் - 100 கிராம்

இட்லி அரிசி - 1 கப்

கடலை பருப்பு - 1/2 கப்

உளுந்தம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

சீரகம் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 2 இணுக்கு

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியையும் பருப்பையும் தனியாகக் கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.

பூசணிக்காயைத் தோல் சீவித் துருவிக்கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

மிக்சியில் அல்லது கிரைண்டரில், முதலில் அரிசியைப் போட்டு முக்கால் பதம் அரைபட்டதும், பருப்புகளைச் சேர்க்கவும்.

அத்துடன், காய்ந்த மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும்.

அரைத்தெடுத்த மாவில், நறுக்கிய வெங்காயம், துருவிய பூசணிக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைக் கலந்து அடை தோசைகளாக ஊற்றவும்.

சுற்றிலும் நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி, மறுபுறம் திருப்பிவிட்டுப் பொன்னிறமானதும், பூண்டு வெங்காயச் சட்னியுடன் பரிமாறலாம்.



பூண்டு வெங்காயச் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்

பூண்டு - 6 பல்

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 6 அல்லது 8

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

புளி - பாக்கு அளவு

வெல்லம் - சிறிய துண்டு

உப்பு, எண்ணெய் தேவையான அளவு


செய்முறை

மிக்சியில், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உப்பு, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். அரைத்தெடுத்த கலவையை அதில் சேர்த்து, நன்றாக எண்ணெய் பிரியும்வரை வதக்கியெடுக்கவும்.

சுவையான பூண்டு வெங்காயச் சட்னி தயார்.

இது அடையுடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.


                                                       ******

கருத்துகள்