கோதுமை மாவு நெய் பிஸ்கெட் | ஆட்டா பிஸ்கெட்


மிக மிக எளிதான அதே சமயம் நாவில் கரையும் அருமையான சுவையுடைய கோதுமை மாவில் தயாரித்த நெய் பிஸ்கெட் செய்முறை. இந்த பிஸ்கெட் செய்ய சோடா உப்பு தேவையில்லை.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 1/4 கப்

சர்க்கரை - 1/4 கப்

நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன்

ஏலக்காய் - 2

உப்பு - 1 சிட்டிகை


செய்முறை

சர்க்கரையை ஏலக்காயுடன் சேர்த்துப் பொடி செய்துகொள்ளவும்.

ஓரு வாயகன்ற பாத்திரத்தில் 1 1/4 கப் மாவைச் சேர்த்து அத்துடன் பொடி செய்த சர்க்கரை, உப்பு நெய் கலந்து பிசைந்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவின் தன்மைக்கேற்ப நெய் அதிகம் தேவைப்படலாம். முழுவதுமாக நெய் சேர்ப்பதற்குப் பதிலாக, பாதி சூரியகாந்தி எண்ணெய், பாதி நெய் சேர்த்தும் பிசைந்துகொள்ளலாம்.

பிசைந்த மாவை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, 1/2 செ.மீ தடிமனுள்ளதாக்கி, ஒரு வெண்ணெய் தடவிய தட்டில் அடுக்கி, 175 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் 12 முதல் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

அல்லது, குக்கரில், உப்பு அல்லது மணல் பரப்பி, அதனைச் சூடாக்கி அதில் ஒரு வளையத்தை வைத்து, அதன் மேல் பிஸ்கெட் அடுக்கிய தட்டை வைத்து, குறைந்த தணலில் 15 முதல் 20 நிமிடங்கள் வேகவைத்தும் எடுக்கலாம்.

மிக மிக மிருதுவான, நாவில் கரையும் நெய் பிஸ்கெட் தயார்!

                                                         ******

கருத்துகள்