வெள்ளைப் பொங்கல் சாப்பிடும் வழிமுறைகள் மூன்று!

பொங்கலன்று வெள்ளைப் பொங்கலும், வெல்லப் பொங்கலும் தயாரித்து சூரியனுக்குப் படையலிடுவது நம் பாரம்பரிய வழக்கம். 

இதில் வெல்லப்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் இனிப்புச் சுவையுடையது. நாம் தனித்துச் சாப்பிடக்கூடியது. ஆனால், எங்கள் ஊரில் வெள்ளைப் பொங்கலை அரிசியுடன் தண்ணீர் மட்டுமே சேர்த்துக் குழையவிட்டுத் தயாரிப்பார்கள்.

அந்த வெள்ளைப் பொங்கலுக்குத் தொடுகறிகள் அவசியம். அத்தகைய வெள்ளைப் பொங்கலை எங்கள் வீடுகளில் எப்படிச் சாப்பிடுவோம் என்ற விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

முதல் நாளன்று, அதாவது பொங்கலன்று மதியம் பலவிதமான காய்கறிகள் சேர்த்து சாம்பாரும் அவியலும் தயாரிப்பது வழக்கம். அதனால் அன்றைக்கு, சாம்பாருடன் வெள்ளைப் பொங்கலைச் சாப்பிடுவார்கள்.



முதல் நாள் சமைத்த வெள்ளைப் பொங்கலை இரவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள். தற்காலத்தில், அப்படியே தூக்கி ஃபிரிட்ஜில் வைத்துவிடலாம். மறுநாளில், அந்தப் பொங்கலைத் தயிர் சேர்த்துப் பிசைந்து,  சுண்டவைத்த சாம்பார் மற்றும் கூட்டுக் கலவையுடன் சாப்பிடுவார்கள்.



தயிர் சேர்த்துச் சாப்பிடப் பிடிக்காதவர்கள் இனிப்பாய்ச் சாப்பிட ஒரு இனிய வழியும் உண்டு. அது தான் மூன்றாவது முறை. எனக்கு மிகவும் பிடித்த முறை.

தேங்காயைத் துருவி, கெட்டியாய்ப் பாலெடுத்து, அந்தப் பாலை வெள்ளைப் பொங்கலில் ஊற்றி, நன்றாக நொறுங்கப் பிசைந்து, அத்துடன் இனிப்புக்குச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கலந்து சாப்பிடும் அருமையான சுவையுடைய முறை.


தேங்காய்ப் பாலின் சுவையும் பச்சை அரிசிப் பொங்கலின் வாசனையும் சேர, இந்தப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையைக் குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் கட்டாயம் விரும்புவார்கள் நீங்களும் இந்த மூன்று முறைகளிலும் பொங்கலைச் சாப்பிட்டுப்பாருங்க...அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

                                                        ******



கருத்துகள்