பால் பொங்கல் செய்முறை | Sweet Pongal Recipe in Tamil


பால் பொங்கல்...இது பாடல் பெற்ற பொங்கலும் கூட... வழக்கமாக, அரிசியுடன் பருப்பும் கலந்து அத்துடன் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கும் சர்க்கரை பொங்கலுக்கு மாற்றாக, பாலில் அரிசி பருப்பைச் சேர்த்து, வேகவைத்துச் செய்யும் இந்தப் பால் பொங்கல் மிக மிகச் சுவையானது.

திருப்பாவைப் பாடல்களில், இளம்பெண்கள் மார்கழி மாதத்தில், நெய்யுண்ணாமல், பாலுண்ணாமல், நாட்காலே நீராடி, கண்களுக்கு மையிடாமல், கூந்தலில் மலரிட்டு முடியாமல், கண்ணனாகிய பெருமானை வேண்டித் தங்களுக்கு நல்ல கணவன் அமையப் பிரார்த்தனை செய்கிறார்கள். அத்தகைய பாவை நோன்பாகிய விரதம் முடிவடையும்போது

பாலில் பொங்கல் செய்து அதை மூடுமளவுக்கு நெய் சேர்த்து, அந்தப் பொங்கலைக் கைகளில் வாங்கி உண்ணும்போது, ஊற்றிய நெய் முழங்கை வரைக்கும் வழியும்படிக்கு அத்தகைய சுவையான பொங்கலை உண்ணவேண்டுமென்றும் தன்னுடைய திருப்பாவைப் பாட்டில் ஆண்டாள் குறிப்பிடுகின்றாள்.

அத்தகைய பால் பொங்கலை எப்படித் தயாரிப்பதென்று இப்பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி - 1/2 கப்

முழுப் பாசிப்பயறு - 2 மேஜைக்கரண்டி

வெல்லம் - 3/4 கப்

பால் - 2 கப்

தண்ணீர் - 1 கப்

நெய் - (1+2) 3 மேஜைக்கரண்டி

ஏலக்காய் - 3

கிராம்பு - 2

முந்திரி - 10

திராட்சை - 10

செய்முறை

பாசிப் பயறை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் பச்சை அரிசியையும் சேர்த்து நன்கு சூடாகும் வரைக்கும் வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த பாசிப்பயறை ஒன்றிரண்டாக உடைத்துவைக்கவும்.

வறுத்த அரிசியை நீரில் கழுவி, அத்துடன் உடைத்துவைத்த பாசிப்பயறையும் சேர்த்து, அத்துடன் இரண்டு கப் பால் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் குழைய வேகவிடவும்.

வெல்லத்தை அரைக் கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டிவைக்கவும்.

வெறும் வாணலியில் ஏலக்காய், கிராம்பு சேர்த்து லேசாக வறுத்துவிட்டுப் பொடித்துவைக்கவும்.

குக்கரில் அரிசி பருப்புக் கலவை வெந்ததும் அதனை எடுத்து ஒரு கரண்டியின் பின்புறத்தால் நன்கு மசித்துவிடவும்.

அத்துடன் கரைத்துவைத்த வெல்லக்கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கலவை கொதித்துவரும் சமயத்தில் பொடித்துவைத்த ஏலக்காய் கிராம்பைச் சேர்க்கவும்.

வாணலியில் இரண்டு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து அதில் முந்திரி திராட்சையை வறுத்து, பால்பொங்கலில் மூடும்படி ஊற்றிவிட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

 சிறிது நேரம், அதாவது ஒரு பத்து நிமிடம் அப்படியே மூடிவைத்துவிட, ஊற்றிய நெய் பொங்கலுக்குள் இறங்கிவிடும். அதன்பின் எடுத்துப் பரிமாறலாம்.

இந்தப் பொங்கல் மிக மிக அருமையான ருசியுடன் இருக்கும். தோலில்லாத பாசிப்பருப்பு சேர்ப்பதைவிட முழுப் பாசிப்பயறு சேர்த்துச் செய்வது நல்ல வாசனையையும் சுவையையும் கொடுக்கும்.

                                                  *********


கருத்துகள்