மணக்கும் மட்டன் தால்சா | Mutton Dalcha in Tamil

பிரியாணி, நெய்ச்சோறு மற்றும் குஸ்கா சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதற்கு ஏற்ற மிக அருமையான மட்டன் தால்சா இது. இந்த மட்டன் தால்சா செய்வதற்கு எலும்புடன் சேர்ந்த கறி மிகவும் நன்றாக இருக்கும். 

மட்டன் தால்சா செய்யத் தேவையான பொருட்கள்

எலும்புடன் சேர்ந்த கறி - 200 கிராம்

துவரம் பருப்பு - 1/4 கப்

கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 1

கத்தரிக்காய் - 3

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி

புளி - சிறு நெல்லிக்காய் அளவு

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

வத்தல் பொடி - 1/2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10 - 15

சின்ன வெங்காயம் - 5

வத்தல் பொடி - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 சிட்டிகை


செய்முறை

கறியைக் கழுவி, அத்துடன் மஞ்சள் பொடி, பருப்பு வகைகள், நறுக்கிய வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு எடுக்கவும்.

புளியை ஊறவைத்து வடிகட்டி வைக்கவும்.

தேங்காயைச் சீரகத்துடன் சேர்த்து அரைத்துவைக்கவும்.

கத்தரிக்காய்களை நறுக்கித் தண்ணீரில் போட்டுவைக்கவும். விருப்பப்பட்டால் ஒரு முருங்கைக்காய், வாழைக்காய் கூடச் சேர்க்கலாம்.

கறி, பருப்புக் கலவை வெந்தபின், அத்துடன் நறுக்கிய கத்தரிக்காய், அரைத்து வைத்த தேங்காய், கரைத்து வைத்த புளித்தண்ணீர் சேர்த்துக் கலந்துவிட்டு, அத்துடன் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும்.

கலவையை அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போகுமளவுக்கு நன்றாக மூடிவைத்துக் கொதிக்கவிடவும்.

கடைசியாக, வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு வெடித்தபின் கைப்பிடியளவு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பொரியவிடவும். அத்துடன் கால் தேக்கரண்டி வத்தல்தூள், சிட்டிகையளவு கரம் மசாலா மற்றும் கறிவேப்பிலையையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.

தாளித்த கலவையைக் கொத்தித்துக்கொண்டிருக்கும் குழம்புக் கலவையில் சேர்த்துவிட்டு அடுப்பை அணைத்துவிடலாம்.

அருமையான மணக்கும் மட்டன் தால்சா தயார்.

தாளிக்கும்போது சேர்க்கும் வத்தல்தூள் குழம்பிற்கு நல்ல நிறத்தையும், கரம் மசாலா நல்ல வாசனையையும் கொடுக்கும்.

                                             ******

கருத்துகள்

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!