பனீர் தம் பிரியாணி | Paneer Biryani Recipe in Tamil

குக்கர் பிரியாணி செய்முறை...பள்ளி, கல்லூரிக்குச் செல்பவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் கொண்டு செல்வதற்கு ஏற்ற லஞ்ச் பாக்ஸ் பனீர் பிரியாணி. சமைப்பது எளிது ஆனால், சுவையோ அதிகம். 



பனீர் தம் பிரியாணிக்குத் தேவையான பொருட்கள்

பனீர் - 200 - 250 கிராம்

பாஸ்மதி அரிசி - 2 கப்

தக்காளி (பெரியது) - 1

வெங்காயம் (பெரியது) - 1

பச்சை மிளகாய் - 2

கொத்துமல்லி, புதினா - தலா ஒரு கைப்பிடி

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

வத்தல் பொடி - 1 + 1 தேக்கரண்டி

பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

தயிர் - 3 மேஜைக்கரண்டி

எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

நெய் - 1 மேஜைக்கரண்டி

தண்ணீர் - 3 கப்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

பனீர் துண்டுகளை 1/4 தேக்கரண்டி மஞ்சள்த்தூள், 1 தேக்கரண்டி வத்தல் தூள், 3/4 தேக்கரண்டி உப்பு சேர்த்துக் குலுக்கிவிட்டு, 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

பாஸ்மதி அரிசியைக் களைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

பச்சை மிளகாயைக் கீறிவைக்கவும்.

வாணலியில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, ஊறவைத்த பனீர்த் துண்டுகளை மெதுவாகப் பிரட்டி விட்டு, கருகாமல் இரண்டு நிமிடம் வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும்.

அதே எண்ணெயில், பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திரப்பூ சேர்த்து வறுக்கவும். தேவைப்பட்டால் ஏழெட்டு முந்திரிப்பருப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதையும்  சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போக வதக்கிவிட்டு, அத்துடன் நறுக்கிய தக்காளி மற்றும் கொத்துமல்லி, புதினா இலைகளையும் சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடங்கள் மூடிவைத்து தக்காளியை மசிய வேகவைக்கவும்.

அத்துடன் வத்தல் பொடி மற்றும் கரம் மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கிய காய்கறி மசாலாக் கலவையுடன், 3 அல்லது 4 மேஜைக்கரண்டி தயிர் சேர்த்துப் பிரட்டி விடவும்.

அத்துடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, மூன்று கப் தண்ணீரையும் சேர்க்கவும்.

உப்பு சரி பார்க்கவும்.

குக்கரை ஒரு தட்டினால் மூடி, அரிசியை வேகவிடவும்.

அரிசி முக்கால் பதம் வெந்தபின் அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி பிரியாணி மசாலாவையும் சேர்த்து கலந்துவிடவும்.

வறுத்துவைத்த பனீர்த்துண்டுகளை மேலாகப் பரப்பிவிட்டு, சிறிதளவு மல்லி, புதினா இலைகளையும் தூவி குக்கரை மூடி வைக்கவும்.

தீயை முழுவதுமாகக் குறைத்து 5 நிமிடங்கள் வேகவிட்டு, அதன் பின் தம் போடுவதற்கான தட்டு அல்லது பழைய தோசைக்கல்லின்மேல் குக்கரை வைத்து மேலும் பத்து நிமிடங்கள் தம்மில் வைக்கவும்.

பத்து நிமிடங்கள் கழித்துத் திறக்க, அருமையான பனீர் பிரியாணி தயார்.

இந்தப் பனீர் பிரியாணியை குருமா அல்லது தயிர்ப் பச்சடியுடன் சேர்த்துப் பரிமாறலாம்.

                                                     ******

கருத்துகள்