ஓட்ஸ் உப்புமா | Oats Upma in Tamil

ஓட்ஸில் நார்ச்சத்து மிக அதிகம். இது தவிர, விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் சத்து ஆகியவையும் ஓட்ஸில் உள்ளது. ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த அவசர பிரேக்ஃபாஸ்ட், காலை வேளையில் செய்வதற்கு மிகவும் சுலபமானது. 


தேவையான பொருட்கள் 

ஓட்ஸ் - 3/4 கப் 
சின்ன வெங்காயம் - 5 
பச்சை மிளகாய் - 1
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
முந்திரிப்பருப்பு - 5
கறிவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - தேவையான அளவு


செய்முறை 

முக்கால் கப் ஓட்ஸை, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சேர்க்கவும். அத்துடன் சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூளும், தேவையான உப்பும் சேர்த்து சிறிது சிறிதாகத் தண்ணீரைத் தெளித்து, உதிரியாக ஈரப்பதம் வரும்வரை கலந்துவிடவும். இதற்கு, மூன்றிலிருந்து நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் போதுமானது.



வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரிப் பருப்பு, சிட்டிகை அளவு பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

கடுகு வெடித்தபின், நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும், அத்துடன் நாம் ஈரப்படுத்தி வைத்திருக்கும் ஓட்ஸ் கலவையைச் சேர்க்கவும். 

சேர்த்த பிறகு, அதில் ஒரு கையளவு தண்ணீர் தெளித்துக் கலந்து விட்டு, தீயை முழுதுமாகக் குறைத்துவிட்டு மூடி வைக்கவும். 

3 முதல் 5 நிமிடங்கள் வேகவிடவும். 

மூன்றிலிருந்து ஐந்து நிமிடத்தில் ஓட்ஸ் நன்றாக வெந்துவிடும். 

சுலபமான, உதிர் உதிரான ஓட்ஸ் உப்புமா தயார்!




***




கருத்துகள்