முட்டைக்கோஸ் ஓமப்பொடி ஆம்லெட்

காலை உணவாகவும், மாலை நேரத் தின்பண்டமாகவும் உண்பதற்கு ஏற்ற ஆம்லெட் செய்முறை. பொதுவாக நம் வீடுகளில் மீதமாகும் மிக்சர், முறுக்கு போன்ற தின்பண்டங்களை இது மாதிரி ஆம்லெட் செய்யும்போது சேர்த்துச் செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.  முறுக்கைப் பொடி செய்து அதைக் கூட்டு, பொரியல் செய்யும்போது சேர்த்துப் பயன்படுத்துவது வழக்கம்.

இன்றைக்கு நாம் செய்யப்போகும் இந்த செய்முறையில்  ஓமப் பொடி சேர்த்து ஆம்லெட் செய்யப்போகிறோம். ஓமப்பொடிக்கு பதிலாக மிக்சர் சேர்த்தும் பண்ணலாம். அதிலுள்ள கடலை, மற்றும் பருப்புகளை நீக்கிவிடலாம். 


தேவையான பொருட்கள் 

முட்டை - 2 

ஓமப்பொடி - 3 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய முட்டைக்கோஸ் -  1/4 கப் 

சின்ன வெங்காயம் - 3 

பச்சை மிளகாய் - 1 

வத்தல் தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 இணுக்கு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை 

நறுக்கிய முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். 

அத்துடன், இரண்டு முட்டைகளை உடைத்துச் சேர்க்கவும். தேவையான உப்பு, கால் டீஸ்பூன் வத்தல் தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும் 

முட்டையை நன்றாக அடித்து கலந்த பிறகு, கடைசியாக, 3 டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஓமப்பொடியை அதில் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.

தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் சிறு சிறு ஆம்லெட்களாகவோ அல்லது பெரியதாக ஒரே ஆம்லெட்டாகவோ பொரித்து எடுக்கலாம்.

தோசைக்கல்லில் ஊற்றியதும், சிறிது நேரம் மூடி வைத்து வேக விட்டால், திருப்புவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

இது குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காபியுடன் அல்லது தேநீருடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

*** 

கருத்துகள்