கத்திரிக்காய் தால் | சப்பாத்திக்கு ஏற்ற கத்திரிக்காய் பருப்புக்கூட்டு

சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பருப்புக் கூட்டு.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 200 கிராம்
துவரம்பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி 1 அல்லது 2
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 அல்லது 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை

கால் கப் துவரம் பருப்புடன், அரைத் தேக்கரண்டி வெந்தயம்,  கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு பெருங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து, பிரஷர் குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.



கத்தரிக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.

பூண்டு, வெங்காயத்தைத் தோலுரித்து நறுக்கிவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். 

தாளித்த பொருட்களுடன், வெட்டி வைத்த வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 


வெங்காயம் நன்கு வதங்கிய பின், மஞ்சள் தூள், வத்தல் தூள் சிறிதளவு கரம் மசாலா சேர்த்து வதக்கவும். 

வெட்டி வைத்த கத்தரிக்காய்களையும் சேர்த்து வதக்கவும் ஒரு நிமிடம் வதக்கிய பின், அத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.


வெந்த கத்திரிக்காயுடன், வேக வைத்த பருப்புக் கலவையைச் சேர்த்துக் கலந்து விடவும். தேவையான தண்ணீர் சேர்க்கவும். 


உப்பு சரி பார்த்துவிட்டு, கடைசியாக, கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கலந்து விட்டு இறக்கவும். 

மிகவும் அருமையான கத்தரிக்காய் பருப்பு தயார்! 



சப்பாத்தியுடன் மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன், நெய்யும் அப்பளமும் சேர்த்துச் சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

முழுமையான வீடியோ செய்முறை இங்கே 👇👇👇

                                                  ******

கருத்துகள்