ராகி களி | கேழ்வரகு களி | Ragi Kali in Tamil

 பத்தே நிமிடத்தில் தயாரிக்கக்கூடிய, சத்தான ராகி களி செய்முறை. ராகியில், கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் அதிக அளவு நார்ச்சத்தும் இருப்பதால், ராகியில் செய்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, அது ஜீரணிக்க அதிக நேரமாகும். அதனால் பசி எடுப்பதும் தாமதமாகும். 


அது மட்டுமன்றி, ராகியில் செய்த உணவுகளை உண்ணும்போது, மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது. இதனால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், நீரிழிவு உள்ளவர்களும் ராகியைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வளரும் குழந்தைகளுக்கும் ராகி மிகவும் நல்லது. ரத்தசோகை தீரவும், எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படவும் ராகி மிகவும் உதவும்.

 ராகி களி செய்யத் தேவையான பொருட்கள் 

ராகி மாவு - 1/4 கப் 

தண்ணீர் - 3/4 கப் 

சின்ன வெங்காயம் - 5 அல்லது 6

பச்சை மிளகாய் - 1 

கறிவேப்பிலை - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

நல்லெண்ணெய் -3 டீஸ்பூன் 


செய்முறை 

கால் கப் ராகி மாவில், முக்கால் கப் தண்ணீர் கலந்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.


சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நறுக்கி வைக்கவும். 

அடிகனமான வாணலியில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கரைத்து வைத்த ராகி மாவை அதில் சேர்க்கவும்.


மாவுடன் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.



ஒன்றிரண்டு நிமிடங்களில், மாவு கெட்டியாக ஆரம்பிக்கும். விடாமல் கிளறி விடவும்.

மாவு கொதித்து கெட்டியாகும் பருவத்தில், மீதமுள்ள 2 டீஸ்பூன் எண்ணையைச் சேர்த்துக் கலந்துவிடவும்.


தீயை நன்கு குறைத்து விட்டு, வாணலியை மூடி வைத்து, சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் மாவை வேக விடவும். 


ஐந்து நிமிடங்கள் வெந்தபிறகு, களி நன்கு வெந்து, கையில் ஒட்டாத பதத்தில் இருக்கும். சாப்பிட மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். களியை அடுப்பைவிட்டு இறக்கிவிடவும்.

இந்தக் களியை, பருப்புக் குழம்பு, மீன் குழம்பு அல்லது வெங்காயம், பச்சை மிளகாயுடன் பரிமாறவும். 

மிகவும் சத்தான காலை அல்லது மதிய உணவு தயார்!

இரவு நேரத்தில் ராகி உணவுகளை உண்பதைவிட, பகலில் உண்பது நல்லது.

                                                        ******

கருத்துகள்