கொள்ளு இட்லிப்பொடி | இட்லி பொடி செய்முறை

சத்தான, கருப்பு உளுந்து, கொள்ளு சேர்த்த இட்லி மிளகாய்ப்பொடி செய்முறை. இந்த இட்லிப் பொடியை, இட்லி தோசையுடன் மட்டுமல்லாமல், சாதத்துடனும் சாப்பிடலாம்.


இந்த இட்லிப் பொடி தயாரிக்க நல்லெண்ணெய் இருந்தால் நல்லது. அது தவிர, இந்த இட்லிப் பொடி தயாரிக்க இரண்டு விதமான மிளகாய்கள் தேவை. காரமான குண்டு மிளகாய் மற்றும் விதைகள் நீக்கிய நீளமான மிளகாய்.

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து - 1 கப்

கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

கொள்ளு - 1 டேபிள்ஸ்பூன்

எள் - 1 டேபிள்ஸ்பூன்

காரமான குண்டு மிளகாய் - 5, 

விதை நீக்கிய நீள மிளகாய் - 5, 

கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு 

பூண்டு - 2 பல்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை

நீளமான மிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு எடுத்துவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, பெருங்காயத்தைச் சேர்த்து வறுக்கவும். தூள் பெருங்காயம் சேர்ப்பதாக இருந்தால் அதனைக் கடைசியாகச் சேர்த்தால் போதும்.


அடுத்ததாக, மிளகாயைச் சேர்த்து கருகாமல் வறுத்து எடுக்கவும். 


மீதமிருக்கும் எண்ணெயில் ஒரு கப் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், கொள்ளு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து வறுக்கவும்.

பருப்புகள் வறுபட்டு வாசம் வர, 6 முதல் 8 நிமிடங்கள் ஆகலாம். அதன்பின், ஒரு டேபிள்ஸ்பூன் எள் சேர்த்து வறுக்கவும். எள் வெடிக்க ஆரம்பித்தவுடன், அத்துடன் கறிவேப்பிலை மற்றும் பூண்டுப் பற்களைச் சேர்க்கவும்.




மேலும் அரை நிமிடம் வறுத்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 10 முதல் 20 நிமிடங்கள் ஆற விடவும்.

ஆறியபின், தேவையான உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். 




இந்தப் பொடி நன்கு ஆறிய பின் காற்றுப்புகாத பாட்டிலில் வைத்து மூடி வைக்கவும். இந்தப்பொடி, இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

சாதத்துடன் சாப்பிட, இந்தப் பொடியுடன் நெய் சேர்த்துப் பிசைந்து அப்பளம் அல்லது வடகத்துடன் சாப்பிடலாம் நல்லெண்ணெய் சேர்த்து இட்லி தோசையுடன் பரிமாறலாம் மிகவும் சத்தான முழு உளுந்து, கொள்ளு இட்லிப் பொடி தயார்.

எள், மற்றும் பூண்டு சேர்க்க விருப்பமில்லாதவர்கள் தவிர்த்துவிடலாம்.

******

கருத்துகள்