ராகி பால் கொழுக்கட்டை | பால் கொழுக்கட்டை செய்முறை

சத்தான, சுவையான பால் கொழுக்கட்டை செய்முறை. ராகியில், எலும்பு வளர்ச்சிக்கு ஏற்ற கால்ஷியமும், ரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச் சத்தும் நிறைந்திருப்பதால், ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அனைவருக்கும் நல்லது. இருபது நிமிடத்தில் இந்தப் பால் கொழுக்கட்டையைச் செய்துவிடலாம்.
காலை உணவுக்கு ஏற்ற உடனடி ராகிக்களி செய்முறையையும் இங்கே பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் 

ராகி மாவு - 1/2 கப் 
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் 
வெல்லம் - 125 கிராம் 
உப்பு - 1/4 டீஸ்பூன் 
நெய் - 1/2 டீஸ்பூன் 
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன் 
சுக்குத் தூள் - 1/4 டீஸ்பூன் 
காய்ச்சி ஆறவைத்த பால் - 1/4 கப்

செய்முறை

ஒரு கப் தண்ணீரில், அரை டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய், கால் டீஸ்பூன் உப்புக் கலந்து கொதிக்கவிடவும்.

அரை கப் ராகி மாவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு கலந்து, கொதித்த வெந்நீர் கலந்து, சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த ராகி மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.



125 கிராம் வெல்லத்தை, அரை கப் தண்ணீர் சேர்த்துக் அடுப்பில் வைத்து கரைத்துக்கொள்ளவும்.




வாயகன்ற ஒரு பாத்திரத்தில், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்

தண்ணீர் கொதித்த பின், அதில் உருட்டி வைத்த ராகி மாவு உருண்டைகளைச் சேர்க்கவும். மாவு உருண்டைகள் வெந்து தானாக மேலெழும்பும் வரை அவற்றைக் கரண்டியால் கிளற வேண்டாம். 

ஆறிலிருந்து எட்டு நிமிடங்கள் வேக விடவும். உருண்டைகள் வெந்து மிதந்த பிறகு, கரைத்து வைத்த வெல்லக் கரைசலைச் சேர்க்கவும்.

கால் டீஸ்பூன் சுக்குத்தூள், கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

கலவை கெட்டியாக, ஒரு டீஸ்பூன் அளவுக்கு ராகி மாவை 
2 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரில் கரைத்து, அதைக் கொழுக்கட்டைகளுடன் சேர்க்கவும். 

கால் கப் தேங்காய்த் துருவல் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.





அடுப்பைவிட்டு இறக்கியபின், காய்ச்சி ஆறவைத்த பால் 
கால் கப் சேர்க்கவும். 

சுவையான ராகி மாவு பால் கொழுக்கட்டை தயார்!

                                               ******

கருத்துகள்