பாரம்பரிய எள்ளுருண்டை | Ellu Urundai Recipe in Tamil

பாகு வைக்காமல் பத்தே நிமிடத்தில், இரண்டே பொருட்களை கொண்டு, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய, ஒரு எளிமையான பாரம்பரியத் தின்பண்டம் இந்த எள்ளுருண்டை. 



இந்த எள்ளுருண்டை செய்யப் பாகு வைக்கத் தேவையில்லை. மிகவும் சுலபமான முறையில், வெல்லத்தூள் சேர்த்து இந்த எள் உருண்டை தயாரிக்கலாம். எள்ளுடன் பொட்டுக்கடலை சேர்த்துத் தயாரிக்கும், இன்னொரு வகையான எள்ளுருண்டை செய்முறையை இங்கே பார்க்கலாம். 


எள்ளை ஒரு மருத்துவ மூலிகை என்றே சொல்லுவார்கள். இந்த எள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயே நல்லெண்ணெய் அது மிகவும் பயனுள்ள மருத்துவ தன்மைகளைக் கொண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். எள்ளில் இருக்கும் இரும்புச்சத்து, ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் 

எள் - 1 கப் (150 கிராம்) 

வெல்லம் / வெல்லத்தூள் - 1/2 கப் (100 கிராம்) 


செய்முறை 

ஒரு அடிகனமான வாணலியில், எள்ளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். 


சில நிமிடங்கள் வறுத்தவுடன், எள்ளிலிருந்து புகை வர ஆரம்பிக்கும். அதன்பின், எள் படபடவென்று வெடிக்கும் சத்தம் கேட்கும்.

வெடிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, பாத்திரத்தின் சூட்டிலேயே மேலும் ஒரு நிமிடம் வறுத்து விடவும். 

பின்னர், ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறிய பின், எள்ளுடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்க்கவும்.


இந்த எள்ளு வெல்லக் கலவையை, மிக்ஸியில், விட்டு விட்டு ஒரு நிமிடம் அரைத்தால் போதும். 

அரைத்து எடுத்த எள்ளுக் கலவையை, ஒரு அகலமான தட்டில் கொட்டி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து எடுக்கவும். 




எள்ளில் இயல்பாக இருக்கும் எண்ணைப் பதமே இந்த எள்ளுருண்டை செய்யப் போதுமானது. எள்ளு வெல்லக் கலவை மிகவும் உதிரியாக இருந்தால், ஒரு சில துளிகள் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் எடுத்துக்கொண்ட இந்த அளவுக்கு, 10 முதல் 12 உருண்டைகள் கிடைக்கும். 


மிகவும் சத்தான தின்பண்டம் தயார். 

இதனைத் தொடர்ந்து உண்ணும்போது, எலும்புகள் நரம்புகள் வலுவடையும். ரத்தம் விருத்தியாகும் . எள்ளிலிருந்து கிடைக்கும் எண்ணெய்ச் சத்து, தோல் சம்பந்தமான நோய்களை வர விடாமல் தடுக்கும். 

ராகி மாவில் செய்யக்கூடிய சத்தான பால்கொழுக்கட்டை செய்முறையையும் பாருங்கள்.

பழங்காலத்துப் பலகாரங்கள் உணவே மருந்தாக நமக்கு நலமளிக்கக்கூடியவை. இவற்றை, நீங்களும் செய்து பாருங்கள்.

                                                    ******



கருத்துகள்